பதிவு செய்த நாள்
04
மே
2012
11:05
திருவேங்கடம் :குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி காலை மண்டகப்படிதாரர் ராமலிங்க சுவாமி சார்பில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு பிராமணர் மண்டபகப்படி சார்பில் புஷ்ப வாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் காமதேனு, பூதம், சிங்கம், ரிஷபம், யானை, அன்னம், மயில் போன்ற பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தது. 7ம் திருநாளன்று பல்லக்கிலும், 8ம் திருநாளன்று ரிஷப வாகன சப்பரத்தில் சுவாமியும், ரதத்தில் மீனாட்சியும் திக்விஜயம் நடந்தது. 9ம் திருநாளன்று மாலையில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், இரவில் யானை வாகனம், பூம்பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. 10ம் திருநாளான நேற்று கம்மவார் சமுதாயம் சார்பில் தேரோட்டம் நடந்தது. காலை 11.10 மணிக்கு பக்தர்கள் திரளாக கூடி தேர்வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரத வீதிகளை வலம் வந்து மாலையில் நிலையம் சென்றடைந்தது. கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள், ஆனந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், சண்முகராஜ், வெள்ளையன், தனிப்பிரிவு ஏட்டுகள் குருவிகுளம் கிருஷ்ணசாமி, திருவேங்கடம் கிருஷ்ணசாமி மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை குருவிகுளம் பரம்பரை ஜமீன்தார் ஏ.கே.வி.பிரசாத், கோயில் நிர்வாகி ராமசுப்பு, அர்ச்சகர் லட்சுமிநரசிம்மன் ஐயர், மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.