பதிவு செய்த நாள்
13
மார்
2020
10:03
வடபழநி ஆண்டவர் கோவில் பாலாலய பிரதிஷ்டையும், அதைத் தொடர்ந்து திருப்பணிகள் துவக்கமும், விமரிசையாக நடந்தன.
சென்னைக்கு மேற்கே, வடபழநியில் அமைந்துள்ளது முருகன் திருக்கோவில். இக்கோவில், 1890ம் ஆண்டு எளிய ஓலை கொட்டகையில் நிர்மாணிக்கப்பட்டது.பல்வேறு காலக்கட்டங்களில் வளர்ச்சி பெற்ற இக்கோவிலில், தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் துவங்கின.
இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 9:00 மணி முதல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், கணபதி ஹோமம், நடக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூர்வாங்க பூஜைகள் ஆரம்பமாகின. மாலை, 6:00 மணிக்கு, கலா கர்ஷணம் முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்கின. இரவு, 9:30 மணிக்கு, மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது.பாலஸ்தாபன நாளான நேற்று அதிகாலை, 5:50 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின.காலை, 8:00 மணிக்கு, மகா பூர்ணாஹுதியும், யாத்ரா தானமும் நடந்தன. காலை, 8:30 மணிக்கு கடப் புறப்பாட்டுடன், பாலாலய பிரதிஷ்டை நடந்தது.
தொடர்ந்து, காலை, 9:15 மணிக்கு திருப்பணிகள் துவங்கின.பாலாலயம் மற்றும் திருப்பணி துவக்கத்தை, கண்ணப்ப சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், அசோக்பாபு, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர், வேதாந்தம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாலாலய பிரதிஷ்டையை, பக்தர்கள் பார்வையிடுவதற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின், பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார். எல்.ஆதிமூலம், துணைக் கமிஷனர், சித்ராதேவி ஆகியோர் செய்திருந்தனர்.
பாலஸ்தாபனம் என்றால் என்ன? பாலஸ்தாபனம் குறித்து, கண்ணப்ப சிவாச்சாரியார் கூறியதாவது:கோவிலை, குறிப்பிட்ட காலத்தில் சீரமைக்க, திருப்பணி செய்யப்படுகிறது. அவ்வாறு திருப்பணி செய்யும் இடத்தை பாதுகாக்கும் வகையில், அதே வடிவத்தை செய்து பாதுகாப்பது, பாலஸ்தாபனம்.இவ்வாறு, அவர் கூறினார்.