பதிவு செய்த நாள்
14
மார்
2020
11:03
மடிப்பாக்கம்:கோவில்கள் அனைத்தும் ஆன்மிக கல்வி மையமாக மாற்றப்பட வேண்டும். அங்கு கலாசார கல்வி போதிக்க வேண்டும், என, சுந்தர விநாயகர் கோவிலின் மஹா கும்பாபி ஷேக விழாவில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தெரிவித்தார். மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம், ஷீலா நகரில் அமைந்துள்ளது, சுந்தர விநாயகர் கோவில். அதன் திருப்பணிகள் நடந்து முடிந்து, மூன்றாவது மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழா மலர்இதை முன்னிட்டு, நேற்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று, மஹா பூர்ணாஹுதியும், யாத்ரா தானமும் நடந்தது.
அதைத் தொடர்ந்து கடப்புறப்பாடு நடந்தது. காலை, 10:15 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்ப நீர் சேர்க்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் பன்வாரிலால் புரோஹித், விழா மலரை வெளியிட்டு பேசியதாவது: பக்திகோவில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்ற பின் நடத்தப்படுவது கும்பாபிஷேகம். இந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் நான் பாக்கியம் பெற்றுஉள்ளேன்.உலகம் ஒரு குடும்பம். அதில், பக்தி ஒரு சக்தி. 1,000 ஆண்டுகளுக்கு முன் ஜாதி என்பது கிடையாது. கடவுள் ஒன்று தான். அதை பலவாறு அழைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் அருளாசி வழங்கியதாவது:மகா பெரியவர் ஆயிரக்கணக்கான கோவில்களில் யந்திர பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடத்தினார். நம் கலாசாரம் மிக தொன்மையானது. எதிலும், நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும்.கிராமங்களில் உள்ள பழங்கால கோவில்களில் திருப்பணி நடத்தி, கும்பாபிஷேகம் நடத்த ஆன்மிக வாதிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும்.
அனைத்து கோவில்களிலும் பக்தி, யோகம், நாட்டியம், ஆன்மிகம் என, கலாசாரக் கல்வி போதிக்க வேண்டும். கோவில்களை ஆன்மிக கல்வி மையமாக மாற்ற வேண்டும்.இவ்வாறு, அருளாசி வழங்கினார். இவ்விழாவில், பிள்ளையார்பட்டி கோவில், பிச்சை சிவாச்சாரியார், காமாட்சி சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம், ராகவன் குருஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை பக்த ஜன சபை செயலர்கள் சாமிநாதன், ஈஸ்வரன், ஜனார்த்தனம் செய்திருந்தனர்.