பதிவு செய்த நாள்
14
மார்
2020
12:03
ஆனைமலை: கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், பூக்குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, 11ம் தேதி காலை, மாவிளக்கு எடுத்தல், மாலையில் பூவோடு எடுத்தல் நடந்தது. நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், இரவு, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல் மற்றும் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் குண்டத்தில் இருந்த ‘பூ’ அள்ளிக்கொடுத்து வழிபட்டனர். பக்தர்கள், ‘தாயே பராசக்தி, அம்மா பராசக்தி’ என, கோஷமிட்டு அம்மனை மனமுருகி வழிபட்டனர். குண்டம் இறங்குதல் முடிந்ததும் காலை, 9:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. இன்று, 14ம் தேதி காலை, 9:00 மணிக்கு தேர் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதலும், இரவு, 10:00 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.