பதிவு செய்த நாள்
18
மார்
2020
11:03
அன்னுார்: கொரோனா வைரசை அழித்திட, அன்னுார் அருகே குரோதன பைரவர் வழிபாடு நடந்தது. கடந்த இரு மாதங்களாக, உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் பரவி, பல ஆயிரம் உயிர்களை பலி கொண்டுள்ளது. மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அன்னூர் அருகே, திம்மநாயக்கன் புதுாரில், பிரசித்திபெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று, கொரோனா வைரசை அழித்திட குரோதன பைரவர் வழிபாடு நடந்தது. இதற்காக வேள்வி ஏற்படுத்தப்பட்டு, அந்த வேள்வி ஹோமத்தில், மஞ்சள், இஞ்சி, மிளகு உள்ளிட்ட, 48 வகை மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வேள்வி பூஜையில், அன்னூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். வேள்வி பூஜை முடிவில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவரை பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.