பதிவு செய்த நாள்
18
மார்
2020
11:03
திருப்பதி : கொரோனா பயம் காரணமாக, பக்தர்கள் கூட்டம் இல்லாததால் திருமலை வெறிச்சோடியுள்ளது.
திருமலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முதல் நேரடி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 50 பேருக்கு மேல் கூட்டம் சேராமல், தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்பி வருகின்றனர். இதனால், பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருமலை வெறிச்சோடியுள்ளது.
திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகம், சாலை போக்குவரத்து கழக பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் நேரடி தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்ட கவுண்டர்களில் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்து நேரடி தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
கிருமிநாசினி தெளிப்பு: திருமலையில், பக்தர்கள் கைப்படும் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி மருந்துகளை தேவஸ்தான ஊழியர்கள், 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தெளித்து வருகின்றனர். தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.