பதிவு செய்த நாள்
21
மார்
2020
03:03
மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள புதன், ராகு, கேது கோவில் உள்ளிட்ட ஹிந்து சமய அறநிலையத் துறையின் நவக்கிரக கோவில்கள், சிவாலயங்கள், பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதினத்திற்கு உட்பட்ட சீர்காழி சட்டநாதர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், செவ்வாய் தலமான தையல் நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோவில், திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில், தஞ்சை மாவட்டம், திருபுவனம் சரபேஸ்வரர் உள்ளிட்ட 28 கோவில்களிலும் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல திருவாவடுதுறை ஆதினத்தின் தலைமை திருமடம் உள்ளிட்ட, 150 மடங்கள் மற்றும் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட, 30 கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஆதீனக் கோவில்கள் அனைத்திலும், நித்ய பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.