பதிவு செய்த நாள்
05
மே
2012
10:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: சித்ரா பவுர்ணமியையொட்டி, கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் சூடிக்கொள்ளும், ஸ்ரீவி., ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை சென்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பெரிய பெருமாளுக்கு தினமும் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை சாற்றப்படும். திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில், புரட்டாசி பிரம்மோத்ஸவத்தின் 5ம் நாளான கருட சேவையன்றும், ஸ்ரீவி.,ஆண்டாள் கோவிலிலிருந்து செல்லும், ஆண்டாள் சூடிக்களைந்த மாலை சாற்றப்பட்டு வருகிறது. இது போன்று மதுரை அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்துடன், ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டத்தை சூடி, வைகையற்றில் இறங்குவது வழக்கம். அதன்படி, சித்திரை விழாவையொட்டி, கள்ளழகருக்கு சாற்றப்படும் மாலை, கிளி, பரிவட்டம் ஆகியன, நேற்று மதியம் ஆண்டாளுக்கு சாற்ற, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதன் பின் மாட வீதி, கந்தாடை வீதி வழியாக ஆண்டாள் சூடிய மாலையை ஸ்தானிகம் ராஜா தலைமையில், மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீவி.,யிலிருந்து செல்லும் மாலை, கிளி, பரிவட்டம், தல்லாகுளம் சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு இரவு கொண்டுசெல்லப்பட்டு, பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. ஸ்ரீவி.,யில் நடந்த இதன் நிகழ்ச்சியில், தக்கார் ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரமேஷ், வேதபிரான் பட்டர் சுதர்சனன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.