தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமி, ஐராவதம், காமதேனு, கற்பகமரம், சிந்தாமணி, கவுஸ்துப மணி என ஒவ்வொன்றாக வெளிப்பட்டன. மகாலட்சுமியை மகாவிஷ்ணு மனைவியாக ஏற்றார். மற்றவற்றை இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஏற்றனர். இவற்றுடன் கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. அதைக் கண்டதும் தேவர்களும், முனிவர்களும் செய்வதறியாமல் திகைத்தனர். அவர்களைக் காப்பாற்றும் விதமாக சிவன் விஷத்தைக் குடித்தார். பதறிய பார்வதி தடுக்கவே, விஷம் சிவனின் கழுத்தில் தங்கியது. அதனால் ‘நீலகண்டன்’ எனப் பெயர் பெற்றார். அதன்பின் பாற்கடலைக் கடைந்த தேவர்கள் அமிர்தம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தனர். ஆனால் விஷத்தை ஏற்று தங்களைக் காப்பாற்றிய சிவனுக்கு நன்றி சொல்ல மறந்தனர். பின்னர் தவறை உணர்ந்த அவர்கள் பிரதோஷ தினமான திரயோதசி திதியன்று (மாலை 4:30 – 6:00 மணிக்குள்) மகாதேவனான சிவனை வழிபட்டனர். மனமிரங்கிய அவரும் தன் வாகனமான நந்தியின் கொம்புகளுக்கு நடுவில் நின்று நடனமாடி தேவர்களுக்கு அருள்புரிந்தார். வாழ்வில் தவறு செய்தவர்களும், நன்றி மறந்து துரோகம் இழைத்தவர்களும் கூட பிரதோஷத்தன்று மகாதேவனான சிவபெருமானைச் சரணடைந்தால் நன்மை கிடைக்கும்.