பதிவு செய்த நாள்
30
மார்
2020
02:03
உடுமலை:வீடுகளில், வேப்பிலை தோரணம் வைத்து, யாரையும் அனுமதிக்காமல், கிராம மக்கள், சமூக விலகலுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளோடு, ஊரடங்கையும் அரசு அமல்படுத்தியுள்ளது.
தனித்திருங்கள்; வீட்டில் இருங்கள், என பல கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடுமலை, குடிமங்கலம் வட்டார கிராமங்களிலும், ஊராட்சி நிர்வாகம் தரப்பில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது; வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் எனவும் தண்டோரா மூலம் நாள்தோறும் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கிராம பெண்கள், இந்த ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், பாரம்பரிய முறைகளையும், பின்பற்றி வருகின்றனர். கோடை காலத்தில், அம்மை நோய் தாக்குதல் ஏற்படும் வீடுகளையும், பாதித்தவர்களையும், தனிமைப்படுத்துவது வழக்கம். அந்த வீட்டுக்கு யாரும் செல்லக்கூடாது என்பதற்காகவும், கிருமித்தொற்றை தடுக்கவும், வீட்டின் முன்பு, வேப்பிலைகளை கட்டி தோரணம் அமைப்பார்கள்; மஞ்சள் கலந்த தண்ணீரை, குடங்களில் நிரப்பி, அதில் வேப்பிலை சொருகி வைப்பார்கள். இந்த நடைமுறையை தற்போது, கொரோனா தடுப்புக்காக, கிராம பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு, வேப்பிலையை வீட்டின் முன்பு சொருகி வைப்பதால், மற்றவர்கள் வீட்டுக்கு வருவதை தவிர்ப்பார்கள்; வீடும் தனிமைப்படுத்தப்பட்டது போல ஆகி விடும். இவ்வாறு, அரசின் ஊரடங்கிற்கும், சமூக விலகலுக்கும் பாரம்பரிய முறைகள் மூலம், கிராம பெண்கள் ஒத்துழைப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.