மஞ்சூர்: அன்னமலை முருகன் கோவிலில் நடப்பாண்டு காவடி பெருவிழா கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் காவடி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் பங்கேற்கின்றனர். நடப்பாண்டு திருவிழா வரும் ஏப்., 14ஆம் தேதி நடப்பதை யொட்டி அதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த உத்தரவு ஏப்.,14 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இம்முறை பிரசித்திபெற்ற காவடி பெருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணா நந்தா ஜி கூறுகையில்," அன்னமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் காவடி பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது இம்முறை அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் பாரத பிரதமரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இம்முறை காவடி பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது." என்றார்.