திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2020 01:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிதிருவரங்கம் எனப்போற்றப்படும் திருக்கோவிலூர் அடுத்த திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் இதிகாச காலத்தில் உருவான பழமையான கோவிலாகும். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், பூஜைகள் நடந்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் மாலை பூஜை முடிந்து பட்டாச்சாரியார்கள் கோவிலை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலை திறந்தபோது தாயார் சன்னதியில் இருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, கோவிலின் வெளிப்பிரகார மதில் சுவற்றில் கயிறு கட்டி உள்ளே இறங்கிய இரண்டு கொள்ளையர்கள், தாயார் சன்னதியில் இருந்த உண்டியலை இரும்பு கம்பியால் உடைத்து பணத்தை அள்ளிச் சென்றது கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சமீபத்தில்தான் உண்டியல் திறக்கப்பட்டது என்பதால் 25 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணம் இருந்திருக்கக்கூடும் என கோவில் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு மிகுந்த ஒரு பழமையான கோவிலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.