செந்துறை: செந்துறை பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளிலேயே ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனை செய்தனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
இதையடுத்து வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கோயில்களில் ஆகம விதிப்படி வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மக்கள் கூடுவதை தவிர்க்க அறிவிக்கப்பட்டது. கடைபிடிக்கும் விதமாக ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளிலேயே உலக நன்மை வேண்டியும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடவும் பிரார்த்தனை செய்தனர். செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் பாதிரியார்கள் மட்டும் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்தினர். இதேபோல் நத்தம், புகையிலைப்பட்டி, வங்கமனூத்து, கொசவபட்டி, தவசிமேடை உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பிரார்த்தனை செய்தனர்.