புதுச்சேரி - புதுச்சேரியில் கொரோனா தாக்கதிலும், தொடர்ந்து வீதிகளில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து, மலர் துாவி, புத்தாடை வழங்கி நன்றி தெரிவித்தனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
சுகாதாரத்துறை, போலீஸ், வருவாய், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பைகளை, துப்புரவு பணியாளர்கள் கொரோனா அச்சம் ஏதும் இன்றி தொடர்ந்து, துாய்மை செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.புதுச்சேரியில், நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணி நடந்து வருகிறது. கொரோனா பரவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொடர்ந்து குப்பைகளை அகற்றி சுகாதார பணி மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களை, அய்யங்குட்டிப்பாளையம், சிவசக்தி நகர் இளைஞர்கள் கவுரவித்தனர்.சிவசக்தி நகர், அமைதி நகரில் துப்புரவு பணி மேற்கொள்ள வந்த துப்புரவு பணியாளர்களின் கால்களை கழுவி பாத பூஜை செய்தனர். பின்பு, மலர்களை துாவி வாழ்த்தி அரிசி, மளிகை பொருட்கள், புத்தாடை கொடுத்து நன்றி தெரிவித்தனர்.தொடர வேண்டும்நோய் தொற்றை பற்றி கவலைப்படாமல் வீதிகளை தினசரி சுத்தம் செய்து வரும் துப்புரவு பணி யாளர்களின் சேவையை உணர்ந்து, வரும் காலத்திலும் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.