பதிவு செய்த நாள்
16
ஏப்
2020
01:04
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பண்ணையில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மாம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது.இக்கோயிலுக்கு சொந்தமான செங்குளம் பண்ணையில் நட்சத்திர பலன் தரும் மரங்கள், தென்னை, வாழை, கரும்பு, கீரை வகைகள், பசுந்தீவனம் உள்ளிட்டவை இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இங்குள்ள கோ சாலையில் 50 பசுக்கள், கோயிலில் 50 பசுக்கள், 20 கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.
இவைகளுக்கு தேவையான தீவனம் பண்ணையில் விளைவிக்கப்படுகிறது. பால் அபிஷேகத்துக்கும், பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கவும், கன்றுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பசு சாணத்தில் விபூதி தயாரிக்கப்படுகிறது. பண்ணையில் மாம்பழம் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. கிளிமூக்கு மாங்காய், கல்லாமை, நாட்டு மா உள்ளிட்டவை அதிகளவில் விளைந்துள்ளன. இவை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அருகே கோயில் சார்பில் தினமும் காலை 7:00 மணி முதல் விற்கப்படுகிறது. ஊரடங்கு முடிந்ததும் பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.