பதிவு செய்த நாள்
27
பிப்
2026
05:02
தஞ்சாவூர், கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி தயாரிக்கப்பட்டு, சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டியில் பல ஆண்டுகள் பழமையான ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் முகப்பில், பிரதிஷ்டை செய்ய, கடந்த 2016ம் ஆண்டு, கும்பகோணம் வட்டம், சத்திரம் கருப்பூர் உள்ள தரணி மெட்டல்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம், 65 டன் எடையிலான ஐம்பொன்னால் சிலை வடிவமைக்க, ஆடார் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஸ்தபதி கோபு தலைமையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சிலையை வடிவமைப்பு பணியை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினர். சிலையின் ஒவ்வொரு பாகங்களும் தனித்தனியாக மெழுகால் அச்சு எடுக்கப்பட்டு, ஐம்பொன்னை உருக்கி ஒரே வார்ப்பில் சிலையை தயாரிக்கப்பட்டது. அதன்படி, சுமார் 13 அடி உயர பீடமும், 38 அடி உயர அதிபராசக்தி அம்மன் சிலை என 51 அடி உயரத்திற்கு, 65 டன் எடையிலான அளவுக்கு தயார் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாயாகும். இதையடுத்து அம்மன் சிலை கும்பகோணத்தில் இருந்து சேலத்திற்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மேள தாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மலர்கள் துாவி வணங்கினர். இந்த சிலை வரும் மார்ச்.1ம் தேதி கோவிலுக்கு சென்றடைய உள்ளது.