பதிவு செய்த நாள்
27
பிப்
2026
05:02
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. தேரோட்டத்தின்போது, குன்றத்துார் வீதிகளே விழாக்கோலம் பூண்டிருந்தது.
குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள, ஒரே முருகன் கோவில் என்ற சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது.அறங்காவலர் குழு முயற்சியால், 496 ஆண்டுகளுக்கு பின், மூன்றாவது ஆண்டாக மாசி மாத பிரம்மோத்சவ விழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனார். இந்த நிலையில், ஏழாம் நாளான இன்று பிரம்மோத்சவத்தின் ஒரு பகுதியாக, தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வசேனாவுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி வலம் வந்தார்.இதில், திரளான பக்தர்கள் திரண்டு வந்து, ‘ஓம் முருகா’ கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். திருத்தேர் விழாவை முன்னிட்டு, குன்றத்துாரில் வீதிகளே விழாக்கோலம் பூண்டிருந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.