பதிவு செய்த நாள்
08
மே
2012
10:05
தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா, இன்று தொடங்கி மே 15 வரை நடக்கிறது. திருவிழா கடந்த ஏப்., 18ல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படி, அம்மன் வீதி உலா நடந்தது. பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வந்தனர். இன்று முதல் (மே 8) விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மலர்விமானத்தில் அம்மன் வீரபாண்டி ஊருக்குள் இருந்து, கோவிலுக்கு பவனி வருகிறார். இன்று ஒரே நாளில் மூன்று லட்சம் பக்தர்கள் வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. மே 9ல் அம்மன் முத்துப்பல்லக்கில் பவனி வருகிறார். 10ல் புஷ்ப பல்லக்கில் பவனி வருகிறார். மே 11ல் தேரோட்டம் துவங்குகிறது. முக்கிய வீதிகளின் வழியாக தேர் மூன்று நாட்கள் வலம் வந்த பின், 14ல் நிலைக்கு வருகிறது. முத்துச்சப்பரத்தில் அம்மன் திருத்தேர் தடம் பார்க்கிறார். மே 15ல் ஊர் பொங்கல் நடக்கிறது. போலீஸ் பாதுகாப்பு: விழா நடக்கும் ஒரு வாரமும், 1,500 போலீசார், மூன்று ஷிப்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், குற்றவாளிகளை பிடிக்கும் தனிப்படை, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கான தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு அக்னி சட்டி எடுத்துச் செல்பவர்களுக்கு தனியாக ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.