திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலின் அர்த்த மண்டபத்தில் நவக்கிரக விக்ரகங்களுக்குப் பதிலாக ஒன்பது விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். இத்தலத்தில் ஒன்பது கிரகங்களும், ஒளி வடிவில் பெருமானை வழிபடுவதாக ஐதீகம். இதே அமைப்பில் நவக்கிரக விளக்குகளை திருச்சி அருகிலுள்ள திருப்பைஞ்ஞீலி, பைஞ்ஞீலிநாதர் கோயிலிலும் தரிசிக்கலாம். நீதிதவறாத மனுநீதிச்சோழன் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். ஒரு பசுவுக்கு தீங்கிழைத்த தன் மகன் வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டுக்கொன்றபோது, தியாகேசப்பெருமானே நேரில் வந்து வீதிவிடங்கனை உயிர்ப்பித்தார். மற்ற சிவன் கோயில்களில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பிரதோஷ விழா நடக்கும். ஆனால், திருவாரூரில் தினமும் மாலையில் இந்த பூஜை நடைபெறும். தியாகராஜருக்கு நடக்கும் சாயரட்சை தீபமும் விசேஷம். இக் கோயிலில் உள்ள நெல்லிக்கனி விநாயகர் மிகவும் பிரசித்தமானவர். இவருக்கு நெல்லிக்கனி மாலை சாத்தி வழிபடுவர். இந்த வழிபாட்டைச் செய்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பர்.