கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை 3 மணி முதல் 6 வரை புஷ்ப யாகம் நடந்தது. இதனையொட்டி பெருமாள், தாயார், உபநாச்சியார், சுதர்சனர் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கார திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டது. பெருமாள் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து உள்பிரகாரம் வலம் சென்று மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் விஸ்வக் சேனர் வழிபாடு, புன்னியாகவசனம், கலச ஆவாகனம் பூஜைகள் மற்றும் யாக குண்டத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்கள் வாசிக்கப்பட்டு புஷ்ப யாக வைபவம் நடந்தது. மங்கள மூலிகை பொருட்களை கொண்டு யாகத்தில் சேர்பித்தனர். மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை நடக்கும் விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.