கைலாயத்தில் உமாதேவிக்கு இறைவன் "ஓம் என்னும் மந்திரத்தின் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார். தாயின் மடியில் அமர்ந்திருந்த பாலமுருகனும் அம்மந்திரப் பொருளைத் தவறுதலாகக் கேட்டுவிட்டார். எந்த மந்திரஉபதேசமாக இருந்தாலும், அதைக் குருவின் மூலம் தான் கேட்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால், தவறுதலாக இந்த மந்திரத்தின் பொருளை அறியும் நிலைமை ஏற்பட்டதால், அதற்கு பிராயச்சித்தமாக முருகப்பெருமான் பூலோகம் வர வேண்டிதாயிற்று. அவர் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தை வந்தடைந்தார். ஈசனை நோக்கி தன் தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டி தவம் செய்தார். தவத்தை மெச்சிய சிவன், ஒரு தைப்பூச நன்னாளில் பார்வதியுடன் காட்சியருளினார். அவர்கள் காட்சி தந்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் அமைக்கப்பட்டது. அம்பாளுக்கு மீனாட்சி என்றும், சுவாமிக்கு சொக்கநாதர் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்தக் கோயில் தற்போது, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முன்புள்ள சன்னதி தெருவிலேயே உள்ளது. முருகன்கோயிலுக்குச் செல்பவர்கள் முதலில் இந்த மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகம். தைப்பூசத்தன்று இந்த சொக்கநாதரையும், பரங்குன்றத்து முருகப்பெருமானையும் தரிசனம் செய்பவர்கள் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கப் பெறுவார்கள் என்று திருப்பரங்கிரிப்புராணம் கூறுகிறது.