காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா; பக்தர்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2025 12:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று ஆடி திருவிழா நடந்தது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு, வன்னீஸ்வரர், முத்தீஸ்வரர் தோட்டம், நாக கன்னியம்மனுக்கு 25வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் புறப்பாடு, 11:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பும், கூழ்வார்த்தலும், மதியம் 2:00 மணிக்கு ஊரணி பொங்கல் புறப்பாடும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நாக கன்னியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.
கன்னியம்மன் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம், கன்னியம்மன் கோவிலில் 52வது ஆடித்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், காப்பு கட்டும் நிகழ்வு நடக்கிறது. நாளை மதியம் 1:00 மணிக்கு கோவிலில் இருந்து மாகாளியம்மன் புறப்பாடும் ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடக்கிறது. வேங்கையம்மன் காஞ்சிபுரம் அடுத்த ஊவேரி வேங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தது. மதியம் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர். சந்தவெளி அம்மன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், ஆடித்திருவிழாவின் 12ம் நாளான நேற்று முன்தினம் மகாலட்சுமி அலங்காரத்திலும், நேற்று வெள்ளி கவசத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 16ம் நாள் உத்சவமான ஆக., 1ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மாரியம்மன் காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூரில் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலா நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு காப்பு கட்டிவிரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மன், பொன்னியம்மன் வீதியுலா வந்தனர். இரவு 10:00 மணிக்கு நாடகமும், தொடர்ந்து கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.