பதிவு செய்த நாள்
06
மே
2020
03:05
இரண்யாட்சன், இரண்யன் அதர்மம் செய்த அசுர சகோதரர்கள். இரண்யாட்சனை அழித்தார் மகாவிஷ்ணு. இதனால் இரண்யனின் கோபம் அதிகரித்தது. பழிக்குப் பழி வாங்கநினைத்தான். தன்னை வலிமைப்படுத்த பிரம்மாவை நோக்கி தவமிருந்து, மனிதர், மிருகம், பறவைகளால் அழிவு நேரக் கூடாது. பகலிலோ, இரவிலோ, வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ சாகக் கூடாது. எந்த ஆயுதத்தாலும் இறக்க கூடாது என வரம் பெற்றான்.
அதன் பின் எல்லா உலகங்களுக்கும் நானே கடவுள்! என பிரகடனபடுத்தினான். ஓம் இரண்யாய நம: என்னும் மந்திரத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என உத்தரவிட்டான். எல்லா உயிர்களையும் துன்புறுத்தினான். இரண்யனின் மனைவி கயாது கர்ப்பிணியாக இருந்த போது அவனது அரண்மனைக்கு நாரதர் வந்தார். வயிற்றில் இருந்த குழந்தைக்கு ஈரேழு உலகத்துக்கும் தலைவன் மகாவிஷ்ணு. அவருக்குரிய மந்திரம் இது என ஓம் நமோ நாராயணாய நம: மந்திரத்தை உபதேசித்தார்.
பிரகலாதன் என பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தைக்கு அசுரகுருவான சுக்ராச்சாரியார் பாடம் எடுத்தார். ஒவ்வொரு முறையும் அவர் ஓம் இரண்யாய நம: என்று சொல்லும் போதெல்லாம் ஓம் நமோ நாராயணாய நம: என்றே பிரகலாதன் சொன்னான். இந்த விஷயம் இரண்யனை எட்டியது. இரண்யன் வந்து கேட்டபோது, பரம்பொருளான மகாவிஷ்ணுவையே அனைவரும் வணங்க வேண்டும் என்றான் பிரகலாதன். கோபம் கொப்பளிக்க எங்கே அந்த விஷ்ணுவை காட்டு என்றான் இரண்யன்.அவர் துாணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். பதிலளித்தான் பிரகலாதன் இதோ, இந்த துாணில் மகாவிஷ்ணு இருக்கிறானா? என ஒரு துாணைக் காட்டினான். கைகூப்பிய பிரகலாதன் இருக்கிறார் என்றான்.
அவ்வளவு தான். கதாயுதத்தால் துாணைப் பிளக்க முயற்சித்தான் இரண்யன்.அது பிரதோஷ நேரம். கதாயுதத்தால் துாணைப் பிளந்தான் இரண்யன். நரசிம்மம் வெளியே வந்தது. அக்னி ஜுவாலை போன்ற கண்கள். அகன்ற வாய். கூரிய பற்கள். சிம்மத்தின் கர்ஜனையுடன் வந்த நரசிம்மம் அசுரனைக் கைகளால் துாக்கி, கூரிய நகங்களால் மார்பை கிழித்து கர்ஜித்தது. பிரகலாதனுக்காக உடனடியாக துாணில் இருந்து கிளம்பியதால் நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்பார்கள். நரசிம்மத்தின் சீற்றம் தணிய பிரகலாதனை அழைத்து வந்து நிறுத்தினர் தேவர்கள். பிரகலாதனின் அன்புக்கு கட்டுப்பட்டு உக்கிரத்தைக் குறைத்தார் நரசிம்மர். நரசிம்மர் அவதரித்த வளர்பிறை சதுர்த்தசியை நரசிம்ம ஜெயந்தி யாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் செவ்வரளி, துளசி மாலையை நரசிம்மருக்கு அணிவித்து பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டால் நம் விருப்பம் நிறைவேறும்.