பதிவு செய்த நாள்
07
மே
2020
08:05
திருவண்ணாமலை: ஊரடங்கு உத்தரவால், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகம், மற்றும் கிரிவலப்பாதை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
திருவண்ணாமலையில், மலை வடிவில் உள்ள சிவபெருமானை வழிபட, மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவர். இதில், கார்த்திகை மாத தீப திருவிழா, மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி நாட்களில் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவர். சார்வாரி ஆண்டு, சித்ரா பவுர்ணமி திதி நேற்றிரவு, 7:28 தொடங்கி, இன்று(7ம்தேதி) மாலை, 5:14 மணி வரை உள்ளது. ஊரடங்கால், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால், கோவில் வளாகம், கிரிவலப்பாதை, மற்றும் நகர்ப்புறப்பகுதி அனைத்திலும் வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி, கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகள், வசந்த உற்சவ விழா, ஆகியவை www.arunachaleswarartemple.tnhrce.in என்ற, கோவில் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.