பதிவு செய்த நாள்
08
மே
2020
11:05
சென்னை: கோவில் வளாகத்தில், அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர, மற்ற நபர்கள் எவரையும் அனுமதிக்கக் கூடாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்: கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, கோவில் உட்புறம், வெளிப்புறம் உள்ள அலுவலகங்கள் மற்றும் இணை, உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு, பொது சுகாதார மருந்துகள், கையுறைகள், முக கவசங்கள், கிருமி நாசினி போன்றவை வாங்க, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிதி, அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அலுவலகங்களை இயக்குவது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது; அதை பின்பற்ற வேண்டும்.அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள், தினமும் அலுவலகத்திற்கு ஆஜராக வேண்டும். மற்ற பணியாளர்கள், 33 சதவீதம் பேர், சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். அனைத்து கோவில்களிலும், வெளித்துறை பணியாளர்கள், 33 சதவீதம், சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும். உள்துறை பணியாளர்கள், தேவைக்கேற்ப பணிபுரிய வேண்டும். முக கவசத்துடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணியாற்ற வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள பணியாளர்களை, பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் பணியாளர்களுக்கு, விலக்கு அளிக்க வேண்டும். அலுவலக வளாகம், தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.