கூடலூர்: தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு ஊரடங்கால் பக்தர்கள் செல்ல தடை காரணமாக வீடுகளிலேயே தீபமேற்றி பக்தர்கள் வணங்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாளன்று தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் இருமாநில பக்தர்களால் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக சித்ரா பவுர்ணமி நாளான நேற்று, கோயிலில் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. மேலும் பூஜைகள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்ணகி பக்தர்கள், அவரவர் வீடுகளிலேயே கண்ணகி அம்மன் படம் வைத்து தீபமேற்றி வணங்கினர். பல ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு கோயிலில் பூஜை நடத்தப்படாததால், சீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. அதனால் ஊரடங்கு முடிந்தபின் கோயில் வளாகத்தை மட்டும் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.