பதிவு செய்த நாள்
08
மே
2020
04:05
திருப்பூர்: ஊரடங்கு வாபஸ் பெறப்படும்பட்சத்தில், திருப்பூரில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடக்குமா என, பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அலுவலகங்களை திறக்கலாம் என, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், மொத்த பணியாளர்களில், 33 சதவீதம் நபர்களை கொண்டு, வழக்கமான நிர்வாக பணிகளை தொடரலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு அமலாவதற்கு முன்னதாகவே, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன; கோவில் அலுவலகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், நேற்று முதல், கோவில் அலுவலகங்கள், 33 சதவீத பணியாளருடன் இயங்க துவங்கியுள்ளன.கொரோனா குணமாகி, ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படும்பட்சத்தில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடக்குமா என, பக்தர்கள் காத்திருக்கின்றனர். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, விமரிசையாக நடக்கும். அதன்படி, வரும் வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடக்க இறையருள் கிடைக்குமா என, பக்தர்கள் காத்திருக்கின்றனர். இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷிடம் கேட்ட போது, ஊரடங்கு உத்தரவால், கோவில்களில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தினப்படி பூஜைகள் மட்டும் நடக்கிறது. தரிசனத்துக்கும் அனுமதியில்லை. அரசு தரப்பில் இருந்து மறு உத்தரவு வரும் வரை, கோவில் விழாக்கள் நடைபெற வாய்ப்பில்லை, என்றார்.