பதிவு செய்த நாள்
09
மே
2020
10:05
புதுடில்லி: டில்லியில், கோவில்கள் மற்றும் குருத்வாராக்களில், கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யும் பணிகளை, முஸ்லிம் பெண் ஒருவர் மேற்கொண்டு வருகிறார்.
வடக்கு டில்லியை சேர்ந்த, பிளம்பர் தொழில் செய்யும் நியாமத் அலி என்பவர் மனைவி இம்ரானா சைபி, 45. இவர், மேலும் மூன்று பெண்களுடன் இணைந்து, அப்பகுதியில் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களை, கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகிறார். மூன்று குழந்தைகளின் தாயாரான இவர், தற்போது நோன்பை கடைப்பிடிக்கும் நிலையிலும், இந்த பணிகளை தவறாமல் மேற்கொள்கிறார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: நம் நாட்டின் மதச்சார்பற்ற கலாச்சாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என, விரும்புகிறேன். கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட யாரும், எங்கள் பணிகளுக்கு இடையூறு செய்யவில்லை. கொரோனா ஆபத்தானது என்பதை மக்கள் அறிந்திருப்பதால், எங்கள் பணிகளை யாரும் தடுக்கவில்லை. உண்மையில், சமூகங்களை தொற்று ஒன்றிணைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இவர்களின் பணிகுறித்து, நேரு விஹாரில் உள்ள நவ துர்க்கை ஆலய நிர்வாகி, பண்டிட் யோகேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுபோன்ற நடவடிக்கைகள், மத நல்லிணக்கத்தை உருவாக்கும். நாம் அனைவரும், வெறுப்பை ஒதுக்கி, அன்பை ஏற்றுக்கெண்டு, ஒருவருக்கொருவர் நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.