பதிவு செய்த நாள்
09
மே
2012
11:05
பேரூர்:பூண்டி வெள்ளிங்கிரி மலை ஆண்டவர் கோவிலில், மழைவேண்டி, இன்று சிறப்பு வேள்விவழிபாடு நடக்கிறது.கொங்கு மண்டலத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள மலைக்கோவில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலாகும். கடல் மட்டத்திலிருந்து 6,000 அடி உயரத்தில், மூங்கில்குச்சி உதவியுடன் செங்குத்தாக உள்ள ஆறுமலைகளை கடந்து சென்றால், ஏழாவது மலையில் வெள்ளிங்கிரி ஆண்டவர் சுயம்புலிங்கமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும், பங்குனி, சித்திரை, சித்ராபவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறி, வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசித்து வருகின்றனர். பிற மாதங்களில், கடும் குளிர் நிலவுவதோடு, வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால், மலையேறுவது கடினமாகும். இந்நிலையில், வெள்ளிங்கிரி மலையாண்டவர் கோவிலில், இன்று காலை மழைவேண்டி பெருவேள்வி நடக்கிறது. பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் தலைமையில், 25க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர், வெள்ளிங்கிரி மலையேறினர். விடிய, விடிய ஆறுமலைகளைக் கடந்து சென்று, அதிகாலை 6.00 மணிக்கு, ஏழாவது மலையில் விநாயகர் வேள்வி வழிபாடு நடக்கிறது. இதையடுத்து, ஏழு மேகராக குறிஞ்சிபதிகப் பாடல்கள் பாடப்படுகிறது. தொடர்ந்து, மழைவேண்டி பெருவேள்வி துவங்குகிறது. நீலிவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தீர்த்தத்தில், சாமிக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. பூண்டி கோவில் மலையடிவாரத்திலும் மழைவேண்டி சிறப்பு வேள்விகள் நடத்தப்படுகின்றன.