பதிவு செய்த நாள்
13
மே
2020
11:05
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் கட்டப்பட்டிருந்த சாரம் அகற்றப்பட்டதால், தற்போது கோபுரங்களை முழுத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
உலகப் பாரம்பரிய சின்னமாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் தஞ்சாவூர் பெரியகோவிலில் பிப். 5ம் தேதி கும்பாபிஷே விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, இக்கோவிலில் உள்ள கேரளாந்தகன் வாயில் கோபுரம், ராஜராஜன் வாயில் கோபுரம், விமானம் (பெரிய கோபுரம்), அம்மன் சன்னதி கோபுரம் உள்ளிட்ட சன்னதிகளின் கோபுரங்களில் சாரம் கட்டப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கும்பாபிஷேக விழாவுக்கு பிறகும், கோபுரங்களில் கட்டப்பட்ட சாரம் தொடர்ந்து இருந்தது. இதனால், கோபுரத்தின் அழகை மக்களால் முழுமையாகப் பார்த்து ரசிக்க முடியவில்லை. மேலும், தொலைவிலிருந்து பார்த்தாலும், சாரம் கட்டப்பட்டிருந்ததால், கருப்பு நிறத்தில் காணப்பட்டது. இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மற்ற கோவில்கள் மூடப்பட்டதை போல, இக்கோவிலும் கடந்த மார்ச் 18ம் தேதி மூடப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக சாரத்தை அகற்றுவதற்கும் தொழிலாளர்கள் வரவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் வந்ததால், கோபுரங்களில் இருந்த சாரம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சாரம் முழுமையாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, பெரியகோவில் கோபுரங்களின் அழகை முழுமையாகக் காண முடிகிறது.