பதிவு செய்த நாள்
13
மே
2020
10:05
தஞ்சாவூர்: தஞ்சை நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, 1,000 ஆண்டுகள் பழமையானது. இந்த நெட்டி செடிகள், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை, நீர்நிலைகளில் விளையும்.
இதன் நடுப் பாகம் தாமரை தண்டு போல நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும். இதை உலர்த்தி, பதப்படுத்தி, தஞ்சாவூர் பெரிய கோவில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை போன்ற மாதிரிகள் செய்து விற்கப்படுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதன் வெண்மை வண்ணம் மாறாமல் இருக்கும்.அரும்பாவூர் மரச்சிற்பம் பெரம்பலுார், அரும்பாவூர் மரச்சிற்பத்துக்கு, 250 ஆண்டு வரலாறு உள்ளது. தமிழகத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், வடபழநி, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்களின் தேர்கள், இவ்வூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்டன.அத்துடன், 1 அடி முதல், 12 அடி வரையிலான பல வகையான சிற்பங்களும் செய்யப்படுகின்றன. வெளிநாட்டினரால் இந்த மரச்சிற்பங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன.
இயந்திரம் இல்லாமல், உளி, சுத்தியல் உபகரணங்கள் பயன்படுத்தி, சிற்பங்கள் செய்யப்படுவது தான் இதன் தனிச்சிறப்பு.விண்ணப்பம்தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் சார்பில், 2013ல், இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பிக்கபட்டது. தஞ்சை வக்கீல் சஞ்சய் காந்தியின் சட்டப்படியான முயற்சிகளால், இரு பொருட்களுக்கும், தற்போது, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதற்கான உத்தரவு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.