பதிவு செய்த நாள்
09
மே
2012
11:05
மதுரை: நித்தியானந்தாவை எதிர்க்கும் ஆதீனங்களை வைத்தே, அவருக்கு இரு வாரங்களில், சென்னையில், "இளைய ஆதீனமாக பட்டாபிஷேகம் நடத்துவோம், என, மதுரையில் ஆதரவு சாமியார்கள் சூளுரைத்தனர். மதுரை ஆதீனத்தின், 293வது மடாதிபதியாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தாவுக்கு எதிர்ப்புகள் உள்ள நிலையில், இரு நாட்களாக, மதுரை ஆதீன மடத்தில், சாமியார்கள் பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று, சாமியார்கள் திருச்செந்தூர் சைதன்யா, பொள்ளாச்சி ஆதீனம், சதுரகிரியார், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியன், ஆதிசிவா ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின், நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: குறுகிய வட்டத்தில் உள்ள மதுரை ஆதீனத்தின் புகழ், நித்தியானந்தாவால் உலகம் முழுவதும் பரவும். அவரால் மட்டுமே, இதை செய்ய முடியும். இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டது குறித்து, அவர் விளக்கம் அளிக்கத் தயாராக இருந்தும், மற்ற ஆதீனங்கள் கேட்கத் தயாராக இல்லாதது ஏன்? யார் பெரியவர் என்ற பிரச்னை, அவர்களுக்கு இடையே உள்ளது. இன்று அவரை எதிர்ப்பவர்கள், பின்னால் பாராட்டுவர். நாங்கள் நன்கொடை வாங்கி, நித்தியானந்தாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வெளியான தகவல் பொய். துறவிகளுக்கு எதுக்கு காசு? இதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது. நித்தியானந்தாவுக்கு எப்போதும் துணை நிற்போம். அவரை எதிர்க்கும் ஆதீனங்களை வைத்தே, 15 நாட்களில், சென்னையில் நித்தியானந்தாவுக்கு மகுடம் சூட்டுவோம். இது தொடர்பாக, அவர்களை சந்திப்போம் என்றனர். இதற்கிடையே, ஆதீன மடத்தை அரசே ஏற்க வேண்டும் என்று கூறி, "மதுரை மீனாட்சியின் பிள்ளைகள் என்ற பதிவு செய்யப்படாத அமைப்பினர், தலைவர் ஜானகிராமன் தலைமையில், நேற்று காலை மடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின், போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் மனு அளித்தனர்.
நித்தியானந்தாவுக்கு சோதனை: நேற்று காலை நித்தியானந்தா, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அம்மன் சன்னிதி வழியாக சென்ற அவரை, நகர் போலீஸ் உதவி கமிஷனர் துரைச்சாமி, "மெட்டல் டிடெக்டர் வழியாக வருமாறு கூறினார். இதற்கு, சீடர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். பாதுகாப்பு கருதி, இதன் வழியாகத் தான் செல்ல வேண்டும் என்பதில், துரைச்சாமி உறுதியாக இருக்க, "அவர் தனது கடமையை செய்கிறார். ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற நித்தியானந்தா, "மெட்டல் டிடெக்டர் வழியாக, கோவிலுக்குள் சென்றார்.