பதிவு செய்த நாள்
16
மே
2020
11:05
சேலம்: மக்கள், தங்கள் வீடுகள் முன், பாத்திரத்தில், மஞ்சள் நீர், வேப்பிலை வைத்து, ‘கொரோனா’வை விரட்ட வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தில், ‘கொரோனா’ தொற்று பரவலை தடுக்க, கடந்த மார்ச், 24 முதல், ஊரடங்கால், தமிழக சுகாதாரத்துறையுடன் இணைந்து, அனைத்து துறைகளும் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களும், தங்கள் கிராமங்களில், மஞ்சள் நீர் தெளித்து, வீட்டில், வேப்பிலையை கட்டினர். ஆனால், ‘கொரோனா’ தாக்கம் தொடர்வதால், சேலத்தில், மக்கள் வீடுகளை சுத்தமாக வைப்பதில் கவனமுடன் செயல்பட்டு வருகின்றனர். தற்போது வீட்டு வாசலில் கோலமிட்டு, அதன் மீது, ஒரு பாத்திரத்தில் மஞ்சள் நீர், வேப்பிலையால், ‘கும்பம்’ வைத்து வழிபட்டு வருகின்றனர். முதலில், வீராணம், கொண்டலாம்பட்டி, இரும்பாலை, தம்மநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி மக்கள், வீடுகளில், வேப்பிலை கும்பம் வைத்து வழிபடுவதாக தகவல் பரவியதால், மாவட்டம், மாநகர் முழுவதும், காலையில், வேப்பிலை கும்பம் ஏற்றுவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, கொண்டலாம்பட்டி மக்கள் கூறியதாவது: கோடையில் தாக்கும் அம்மை நோயை விரட்ட வேப்பிலை, மஞ்சள் நீர் கும்பம் ஏற்றுவோம். அதன்படி, கொரோனாவை விரட்ட, வீடுகளில் வேப்பிலை கும்பம் ஏற்றி, அம்மன், குலதெய்வ கோவில்களில் வழிபடுகிறோம். செயற்கை கிருமி நாசினிகளை விட, நம் பாரம்பரிய கிருமி நாசினியான வேப்பிலை, மஞ்சளுக்கு, கொரோனா கட்டுப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.