பதிவு செய்த நாள்
16
மே
2020
02:05
சென்னை : தமிழகத்தில் உள்ள, மாமல்லபுரம் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்களை, மத்திய தொல்லியல் துறை, டிரோன் எனப்படும், ஆளில்லா விமான கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகிறது.
தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், 81 கோவில்கள் உட்பட, 250 பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. இவற்றில், கோட்டைகள், அரண்மனைகள் உள்ளிட்டவை அடங்கும். காஞ்சிபுரம், உத்திரமேரூர், புதுக்கோட்டை, தஞ்சை, கும்பகோணம், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில், தற்போதும், மக்களின் வழிபாட்டில் கோவில்கள் உள்ளன.இவற்றை பழமை மாறாமல் பராமரிக்கும் பணியை, மத்திய தொல்லியல் துறை மேற்கொள்கிறது.பூஜை உள்ளிட்ட வழிபாட்டு செயல்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை மேற்கொள்கிறது. இவற்றில் உள்ள பூங்காக்களை, தோட்டக்கலைத் துறை பராமரிக்கிறது. தற்போது, ஊரடங்கால், கோவில்களும், பாரம்பரிய சின்னங்களும் மூடப்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிகளை, மத்திய தொல்லியல் துறை செய்து வருகிறது.இதன் ஒருபகுதியாக, மாமல்லபுரம் கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட பாரம்பரியச் சின்னங்களை துாய்மைப்படுத்துவது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன. தொல்லியல் சின்னங்கள், டிரோன் என்ற ஆளில்லாத விமான கண்காணிப்பு கேமரா வாயிலாக, கண்காணிப்படுகிறது.நேற்று முன்தினம், டிரோன் கேமரா வழியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காற்று மாசு இல்லாமல், மிகவும் தெளிவாகவும், இரவு ஒளியில் ரம்மியமாகவும் காட்சிஅளித்தன.