பதிவு செய்த நாள்
18
மே
2020
10:05
சமூக இடைவெளியை, மது வாங்குவோரே பின் பற்றும் போது, பக்தர்களாலும் முடியும். எனவே, கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, அரசுக்கு ஆன்மிகவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும், கோவில்களில் நடக்க இருந்த விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் பெரும் வருத்தமடைந்தனர்.அவர்களுக்கு ஆறுதலாக, முக்கிய கோவில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் மட்டும், ஆன்-லைன் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
தற்போது, ஊரடங்கின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.சமீபத்தில், குடிமகன்கள் வசதிக்காக, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, தினமும் 500 பேருக்கு, சமூக இடைவெளியுடன், மது பானங்கள் விற்பனை செய்ய, அரசு அனுமதி அளித்து உள்ளது.இந்நிலையில், கோவில்களிலும், சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, ஆன்மிகவாதிகள் தரப்பில் கூறியதாவது:குடிமகன்கள் விஷயத்தில் காட்டும் ஆர்வத்தை,பக்தர்கள் விஷயத்திலும், அரசு காட்ட வேண்டும். டாஸ்மாக் போலவே, கோவில்களிலும் காணிக்கை, நன்கொடை வாயிலாக, வருமானம் வருகிறது என்பதை, மறந்து விடக் கூடாது.டாஸ்மாக்கில்டோக்கன் முறையில், மது பானங்கள் வழங்குவது போல, கோவில்களிலும், டோக்கன் முறையில், தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் .குடிமகன்களே சமூக இடைவெளியை கடைபிடிக்கும்போது, பக்தர்கள் கடைபிடிக்க மாட்டார்களா! எனவே, கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
-நமது நிருபர் --