திருப்பதி: திருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனம் செய்ய மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கிடைத்தால், திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களையும் திறந்து சாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க தேவையான ஏற்பாடுகளில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கோவில்களை திறந்தாலும் பக்தர்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவையான ஏற்பாடுகள், கொரோனா காலம் தீரும் வரைகோவிலில் தினமும் 14 மணி நேரம் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் என்ற கணக்கில் பக்தர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வரிசையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கவும், இலவச தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை தரிசனத்திற்கான நேரத்தை குறிப்பிட்டு ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கவும், தினமும் 7000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளிக்கவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.