பதிவு செய்த நாள்
26
மே
2020
11:05
மதுரை: சித்திரை திருவிழாவில், அனைவரின் கவனத்தையும் கவரும், விசிறி தாத்தா: எனக்கு பூர்வீகமே மதுரை தான். யானைக்கல் அருகே வசிக்கிறேன். 95 வயதாகிறது. இந்தப் பக்கம் வைகை ஆறு; அந்தப் பக்கம் மீனாட்சியம்மன் கோவில்; நடுவில் என் வீடு. என் இளமைக் காலத்தில், சுதந்திரப் போராட்ட தலைவர்கள் பலரும், மதுரைக்கு வருவாங்க. விபரம் தெரியாத அந்த வயசுல நானும் கலந்துகிட்டு, வந்தே மாதரம்... கோஷம் போடுவேன்.
தலைவர்கள் அப்படியே, மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் வருவாங்க. அதைப் பார்க்கக் கோயிலுக்குப் போன நான், அப்புறம் தினமும் கோவிலுக்குப் போக ஆரம்பிச்சேன். நாளடைவில், சுவாமி மேல ரொம்ப பக்தியாக ஆகி விட்டது.மதுரை மட்டுமின்றி, அழகர் கோவில், திருப்பரங்குன்றம், பழநி, ஸ்ரீவில்லிபுத்துார், சமய புரம், ராமேஸ்வரம், சபரிமலைன்னு போக ஆரம்பிச்சேன். அப்படியே ஒரு நாள், மயில்இறகுகளை வாங்கி, பெரிய விசிறி செஞ்சு, கோவிலில் இருந்து சுவாமி வெளியே வரும்போது, விசிற ஆரம்பிச்சேன். அதைப் பார்த்தவர்கள், நல்ல விஷயம் என, பாராட்டினர். பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்தில், அடைஞ்சு கிடக்கும் மக்களுக்கு புழுக்கமாக இருக்கும்.
இப்ப தான், மின்விசிறி, ஏசி மெஷின்லாம் வைக்கிறாங்க. அப்ப, அந்த வசதி கிடையாது; மக்களே வீசிக்குவாங்க. அதனால், மக்கள் அதிகமாக இருக்குற இடத்துல நின்னு வீசுவேன். எல்லாருக்கும் காற்று வர்ற மாதிரி வீசுவேன்.அதைப் பார்த்து ஆச்சர்யப்படுவாங்க; சந்தோஷப்படுவாங்க. அப்படியே, 60 ஆண்டுகளாக, தொடர்ந்து, இந்த வயதிலும் வீசிட்டு வருகிறேன்.யார் கிட்டேயும் எந்த உதவியும் கேட்க மாட்டேன். மனைவி சில ஆண்டுகளுக்கு முன், இறைவனிடம் போய் விட்டார். பேரப்பிள்ளைகள் என்னை பார்த்துக் கொள்கின்றனர். இந்த ஆண்டு சித்திரை திருவிழா தடை செய்யப்பட்டது, வருத்தமாகத் தான் இருக்குது.
ஆனா, கூட்டம் கூடினா நோய் வரும்னு அரசாங்கம் சொல்றாங்க.அரசாங்கம் சொல்றதைக் கேப்போம். அடுத்த ஆண்டு கண்டிப்பா, சித்திரைத் திருவிழா சிறப்பா நடக்கும். அப்ப நான், மக்களுக்கு விசிறி வீசுவேன்.என்னைப் பற்றி அறிந்த சிலர், பத்திரிகைகளில் செய்தி போட்டுள்ளனர். அதை அறிந்த பலர், என்னோட மொபைல் போனுக்கு வந்து, எப்படி இருக்கீங்க? என கேட்டு வருகின்றனர். பலர் என்னை விசாரித்தது சந்தோஷமாக இருந்தது. நிறைய பேர் தேடி வந்து உதவி செஞ்சாங்க. பெரிதாக நான் எதையும் செய்து விடவில்லை. கடவுளுக்கும், மக்களுக்கும் விசிறி வீசுறதுல ஒரு சந்தோஷம். அதைத் தான் செஞ்சேன்!