பதிவு செய்த நாள்
05
ஜூன்
2020
12:06
பல்லடம்: பல்லடத்தை அடுத்த குங்குமபாளையத்தை சேர்ந்த குடும்பத்தினர், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு பானகம் வழங்கினர். ஊரடங்கு துவங்கிய நாள் முதல், கடந்த இரண்டு மாதங்களாக, தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்கப்படவில்லை. நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதால், கோவில்கள் திறப்புக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
கோவில்களில் அன்றாட பூஜைகள் மட்டுமே நடந்து வந்த சூழலில், திருவிழாக்கள் கொண்டாடப்படவில்லை. பக்தர்களுக்கு கோவிலில் அனுமதி வழங்கப்படாததால், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட விழாக்களும் நடைபெறவில்லை. நேற்று, முருகனுக்கு உகந்த வைகாசி விசாக நாள் என்பதால், வழக்கமாக முருகன் கோவில்களில், வைகாசி விசாக விழா, தேர் திருவிழாவுடன் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால், ஊரடங்கு காரணமாக, கோவில்கள் திறக்கப்படாததால், வைகாசி விசாக விழா இம்முறை கொண்டாடப்படவில்லை. இச்சூழலில், பல்லடத்தை அடுத்த குங்குமபாளையம் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், பொதுமக்களுக்கு இலவசமாக பானகம் வழங்கினர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், வைகாசி விசாக விழா வழக்கமாக கோவில்களில் கொண்டாடப்படும் என்பதால், அபிஷேக பொருட்களை கோவிலுக்கு வழங்கி விடுவோம். இம்முறை கோவிலுக்கு செல்ல முடியாததால், வீட்டிலேயே வழிபாடு மேற்கொண்டு, முருகனுக்கு வைத்திருந்த பானகத்தை, வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு வழங்குகிறோம் என்றனர். இலவசமாக வழங்கப்பட்ட பானகத்தை, பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பருகி சென்றனர்.