பதிவு செய்த நாள்
09
ஜூன்
2020
04:06
ஈரோடு: கொங்காலம்மன் கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு, ரூ.2.5 கோடி ரூபாய் வாடகை தராமல், வியாபாரிகள் ‘டிமிக்கி’ தருவது, பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஈரோட்டில், ஆர்.கே.வி., சாலையில், பழமை வாய்ந்த கொங்காலம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான, 46 கடைகள், இரண்டு காலி மனைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த, 2016 சந்தை மதிப்பின் படி, 6,000 ரூபாய் முதல், 65 ஆயிரம் ரூபாய் வரை கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பத்து கடைக்காரர்கள் மட்டுமே, வாடகை செலுத்தி வருகின்றனர். மீதி, 36 கடைக்காரர்கள், காலி மனைதாரர், 2016 முதல் வாடகை தரவில்லை. இந்த வகையில், 2.5 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் செந்தில்வேலவன், சமீபத்தில் ஆய்வு செய்ய வந்தபோது, வியாபாரிகள் ‘டிமிக்கி’ தருவதை கண்டுபிடித்தார். இரண்டாவது முறையாக கடந்த, 3ல் ஆய்வுக்கு வந்த அவர், கடைக்காரர்களை அழைத்து பேசினார். ‘பாக்கியை முழுமையாக செலுத்த முடியாத பட்சத்தில், நான்கு தவணைகளில் செலுத்தலாம். முதல் தவணை, ௧௦ நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையேல் கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும்’ என்று அவர் எச்சரித்தார். இதை கடைக்காரர்கள் ஏற்றுக் கொண்டனர். முதல் தவணை செலுத்த, இன்னும் நான்கு நாட்களே உள்ளதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.