திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வின் ஒருபகுதியாக கொந்தகையில் எடுத்த முதுமக்கள் தாழிகளை அளவிடும் பணியை தொல்லியல் துறையினர் மேற்கொண்டனர்.
பிப்.,19ல் கொந்தகையில் 6 ம் கட்ட அகழாய்வு பணி துவங்கியது. இங்கு 10 முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இதில் 2 தாழிகளில் இருந்த எலும்புகளை ஆய்வுக்காக மதுரை காமராஜ் பல்கலை உயிரியல் துறையினர் எடுத்து சென்றனர். அங்கு தென்னங்கன்றுகள் நடவுக்காக தோண்டிய குழிகளிலும் மண்டை ஓடு, எலும்புகளுடன் முதுமக்கள் தாழி கிடைத்தது. இவை வெவ்வேறு வடிவம், உயரம், அகலம், தடிமனுடன் உள்ளன. இதன் ஆண்டு தெரியவில்லை. இதுவரை 2 முதுமக்கள் தாழிகளில் இருந்துதான் பொருட்கள் எடுத்துள்ளனர். இதற்கான அறிக்கை தயாரிக்கும் பணியை தொல்லியல் துறையினர் துவக்கினர். முதுமக்கள் தாழி கிடைத்த இடம், ஆழம், உயரம், அகலம் குறித்த வரைபடம் தயாரிக்கின்றனர்.தொல்லியல் ஆய்வாளர் கூறுகையில், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் விபரம் ஆய்வு செய்யவே வரைபடம் தயாரிக்கிறோம். முழுமையான ஆய்வுக்கு பின் அதன் ஆண்டு தெரியும், என்றார்.