அமெரிக்காவில் டோமா என்ற சிறுமி இருந்தாள். அவளுடன் பெரிக்ஸ் என்ற நண்பன் உடன் படித்து வந்தான். இருவரும் ஒன்றாக பள்ளிக்கூடத்திற்கு செல்வார்கள். ஒருவருக்கொருவர் படிக்கும், விளையாடும் நேரத்தில் சேர்ந்தே இருப்பர். ஒருநாள் சிறுமி டோமா நெஞ்சுவலியால் துடித்தாள். பெற்றோர் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மூச்சு மேலும் கீழுமாக இழுத்தது. சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் இருதயம் மிகவும் பழுதடைந்து விட்டதாகவும், மூன்று மாதம் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இந்த செய்தியை அறிந்த நண்பன் பெரிக்ஸ் மிக வருந்தினான். ‘‘என் இருதயத்தை என்னுடைய அன்பு சிநேகிதிக்கு கொடுக்க விரும்புகிறேன்’’ என்று பெற்றோரிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் ‘ஏதோ விளையாட்டாக சொல்கிறான்’ என்று அவர்கள் அலட்சியப்படுத்தினர். திடீரென்று ஒருநாள் பெரிக்ஸ் சைக்கிளில் சென்ற போது லாரி மோதி விபத்துக்கு ஆளானான். தலையில் பலமாக அடிபட்ட அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ‘‘நரம்பு மண்டலம் முற்றிலும் பாதித்து விட்டது. பிழைப்பது கஷ்டம். இன்னும் சிறிது நேரத்தில் உயிர் பிரிந்து விடும்’’ எனத் தெரிவித்தனர். வேதனையால் பெரிக்ஸின் பெற்றோர் கதறினர். அப்போது அவனது தாய்‘டாக்டர்! என் மகன் தன்னுடைய இதயத்தை எடுத்து தன் சிநேகிதிக்கு கொடுக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வான். நாங்கள் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டோம். இந்தக் கடைசி நேரத்தில் அவனது ஆசையை நீங்கள் நிறைவேற்றி வைப்பீர்களா?’’ என்று கேட்டு அழுதார். இதைக் கேட்ட தலைமை மருத்துவர் அதற்கான ஏற்பாட்டைத் தொடங்கினார். சிறுவனின் இருதயத்தை ஆப்ரேசன் செய்யப்பட்டு உடனடியாக எடுக்கப்பட்டது. சரியான நேரத்தில் சிறுமி டோமாவின் உடலில் பொருத்தப்பட்டது. மாற்று இருதய அறுவை சிகிச்சையால் டோமா உயிர் பிழைத்தாள். பெரிக்ஸுன் அண்ணன் தன் நண்பர்களிடம், ‘‘எனது சகோதரன் இறந்ததாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் எங்களது சகோதரனின் இருதயம் இன்னும் வேளை செய்து கொண்டிருக்கிறது. டோமாவை பார்க்கும் போதெல்லாம் தம்பி அவளுக்குள் உயிர் வாழ்வதை எங்களால் உணர முடிகிறது’’ என்றான். துன்பத்திலும் பிறருக்கு உதவும் கருணை உள்ளம் என்பது ஆண்டவர் வாழும் இல்லம் தானே!.