பதிவு செய்த நாள்
12
மே
2012
11:05
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், பெரியநாயகி உடனுறையும் பிறவி மருந்தீஸர் கோவிலில் தெப்பத்திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது. இதில், பூ வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து, இரவில் கல்யாணசுந்தரர் புறப்பாடு செய்யப்பட்டு திருக்குளத்திலிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இத்திருவிழாவின் நிறைவாக, நேற்று கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. பிறவி மருந்தீஸர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. புனித நீர்க்குடங்கள் வைக்கப்பட்டு, யாகம் நடத்தி, புனித நீரை ஊற்றி கொடிமரங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கொடி இறக்கப்பட்டு வீதியுலாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைந்தது. பின்னர், கடந்த 15ம் தேதி விக்னேஷ்வரர் பூஜைக்கு பின் சிவாச்சாரியார் சோமாஸ்கந்தனுக்கு, கங்கணம் கட்டப்பட்டு திருவிழா நடந்து வந்தது. கொடியிறக்கத்துக்கு பின் தொடர்ந்து, சிவாச்சாரியார்களின் கங்கணம் அகற்றப்பட்டு, கோவில் சிப்பந்திகள் நாதஸ்வர இன்னிசையுடன் சிவாச்சாரியாரை வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.