புதுச்சேரி : வன்னிய பெருமாள் கோவில் பிரமோற்சவத்தையொட்டி, கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 7ம் தேதி பெருமாள் தாயார் திருமஞ்சனத்துடன் துவங்கியது. 8ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றம், இந்திர விமானத்தில் வீதியுலா நடந்தது. 9ம் தேதி காலை புருஷசுக்த ஹோமம், இரவு சூரியப்ரபை வாகன வீதியுலா, 10ம் தேதி ஹயக்ரீவ ஹோமம், இரவு சேஷ வாகனத்தில் வீதியுலா நடந்தது. நேற்று இரவு கருடசேவை நடந்தது. நிகழ்ச்சியில், பெருமாள் கருட வாகனத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 14ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 15ம் தேதி காலை வெண்ணெய்த் தாழி உற்சவமும், 16ம் தேதி திருத்தேர் வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.