பதிவு செய்த நாள்
14
மே
2012
10:05
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க, ஏழு ஊர் பங்காளிகள், 300 மாட்டு வண்டிகளில் வந்தனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, கார்ணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழு ஊர்களை சேர்ந்த பங்காளிகள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வது வழக்கம்.கடந்த, 2006ம் ஆண்டு, ஊர்வலமாக வந்த ஏழு ஊர் பங்காளிகள், ஐந்தாண்டு கழித்து, நேற்று முன்தினம், ஊரில் இருந்து, 300 மாட்டு வண்டிகளில் 1,000க்கும் மேற்பட்டோர், ஸ்ரீரங்கத்தை நோக்கி கிளம்பினர். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க, ஒரே நேரத்தில், இத்தனை மாட்டு வண்டிகள் ரயில் பெட்டிகள் போல வரிசையாக செல்வதை, திருச்சி மாநகர மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.கொள்ளிடம் ஆற்றங்கரையில், தொடர்ந்து மூன்று நாட்கள் முகாமிட உள்ள இவர்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவர்கள், உணவு தயாரிக்கத் தேவையான பொருட்களை, மாட்டு வண்டிகளிலேயே எடுத்து வந்துள்ளனர். வரும், 17ம் தேதி, 300 மாட்டு வண்டிகளும் ஊர் திரும்புகின்றன.