பதிவு செய்த நாள்
14
மே
2012
10:05
பழநி:பழநி மலைக்கோவில் அடிவாரம், கிரி வீதியைப் போல படி, யானைப் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. கோவில் நிர்வாகமோ, "போலீசார் தான் பொறுப்பு என, தன் பொறுப்பை தள்ளி விட்டு, அலட்சியமாக உள்ளது.பழநி அடிவாரம், சன்னிதி, கிரி வீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு பஞ்சம் இல்லை. நகராட்சி, கோவில் நிர்வாகம் சார்பில், கண் துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும். ஓரிரு நாட்களில், அதே இடத்தில் அதே கடைகள் புத்துயிர் பெறும். கிரி வீதி பாத விநாயகர் கோவில் அருகே, பொருட்களை வாங்குமாறு சிறு வியாபாரிகள், பக்தர்களை தொந்தரவு செய்கின்றனர். வாங்காமல் செல்வோருக்கு, "வந்துட்டாங்கய்யா என, அர்ச்சனை வேறு.கோடை விடுமுறையால், ஏராளமான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர். கிரிவலப் பாதையை வாகனங்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. படி, யானைப் பாதையில் கடை வைத்துள்ளவர்கள், "பெருந்தன்மையாக கொஞ்சம் இடத்தை மட்டும், பக்தர்களுக்காக விட்டு வைத்துள்ளனர். யானைப் பாதை பூங்கா அருகே உடைந்த இடும்பன் சிலை, பல மாதமாகக் கிடக்கிறது. பாறைகள் குவிந்து கிடக்கின்றன. இது, கோவில் ஊழியர்கள் கண்ணில் மட்டும் படவில்லை. மன நிம்மதி தேடி முருகனை நாடும் பக்தர்கள், மலை ஏறி, இறங்குவதற்குள் "போதுமடா சாமி என, கும்பிடு போட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும். ஆக்கிரமிப்புகளை, கோவில் நிர்வாகம் கண் மூடி வேடிக்கை பார்ப்பது தான், கொடுமையின் உச்சம்.இது குறித்து, கோவில் இணை கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில், ""ஆக்கிரமிப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம். இதில் போலீசார் அக்கறை காட்டவில்லை. நாங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், மீண்டும் கடைகள் முளைத்து விடுகின்றன. போலீசார் நினைத்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல, கிரி வீதியை "பளீச் என, மாற்ற முடியும், என்றார்.