பதிவு செய்த நாள்
30
ஜூன்
2020
10:06
சென்னை: கோவில்களில் பூஜைகளுக்கு தடை ஏற்படுத்தினால், நாட்டிற்கும், அரசுக்கும் கேடு விளையும், என்று, ஓம்காரநந்தா கூறினார். ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுதும் உள்ள வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், நித்திய பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன, 10 நாள் உற்சவம் நடந்து முடிந்தது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் தரப்பில், கடும் இடைஞ்சல் ஏற்படுத்தப்பட்டதால், ஆன்மிக நல விரும்பிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தர்ம ரக்ஷண சமிதி தமிழக தலைவர், ஓம்காரநந்தா கூறியதாவது:சைவர்களுக்கு பிரதானமானது, தில்லை நடராஜர் கோவில். எனவே, அங்கு வழிபாடுகள் முறையாக நடத்த வேண்டும். அதை தடுத்து நிறுத்தினால், நாட்டிற்கு கேடு விளையும். திருமூலர், திருமந்திர பாடலில் திருக்கோவில் என்ற, தலைப்பில் கூறப்பட்டுள்ளதும், இது தான். தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து விட்டு, கோவில் வழிபாடுகளை, அரசு தடுத்து நிறுத்துகிறது. இதற்கு, கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். சைவ ஆதீனங்கள் அனைவரும் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அடியார்கள், இதை மனதில் வைத்து, புழுங்கி வருகின்றனர். அரசு அறிவியல் பூர்வமாக செயல்பட வேண்டும். கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்தால், டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். பணத்திற்காக அநியாயம் செய்யக் கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.