சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே சிலுவத்தூர், காம்பார்பட்டியில் ஆதிசிவம் 1008 கோயில் பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இரு முறை சிவ லிங்கங்களுடன் தம்பதிகள் பங்கேற்ற மகா யாகம் நடத்தப்பட்டது. பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் வீட்டிருக்கும் வகையில் 4 தளங்களுடன் கோயில் பணி துவங்கப்பட்டது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சிவலிங்கங்களை வழங்கினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் இருந்து ஒரே கல்லால் ஆன 16 டன் எடையுள்ள விஷ்ணு சிலை வரவழைக்கப்பட்டது. இதற்காக ஜெய புவனேஸ்வரி அறக்கட்டளை தொடங்கப்பட்டு நன்கொடைகளும் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வருகையும் குறையத் துவங்கியது. இருப்பினும் ஒரு சில பக்தர்கள் பூட்டியிருக்கும் கோவிலை வெளியில் நின்று பார்த்து செல்கின்றனர். தனியார் நிர்வகிக்கும் கோயில் என்ற போதிலும் கட்டுமான பணி தொடர பக்தர்கள் எதிர்பார்ப்பு உள்ளது.