பதிவு செய்த நாள்
01
ஜூலை
2020
02:07
சிதம்பரம் :சிதம்பரத்தில், தீட்சிதர்களின் வீடுகளில், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என, நகராட்சியின் சுகாதார ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில், 150 தீட்சிதர்கள் மட்டும் பங்கேற்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இரு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த, 10 பேர் தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு தொற்று இல்லை என தெரிந்ததும், 60 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட தீட்சிதர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு, வருவாய் துறை உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என, நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். அதில், பாதிக்கப்பட்டவர் பெயர் குறிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள், 100க்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்று பாதிக்காதவர்களின் வீடுகளில், அறிவிப்பின்றி நோட்டீஸ் ஒட்டியது ஏன் என கேட்டு, நகராட்சி சுகாதார ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாசில்தார் அரிதாஸ், டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தீட்சிதர்களிடம் பேசினர். பின், தீட்சிதர்கள் கலைந்து சென்றனர்.