பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
10:07
மதுரை : ’கோவில்களில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு கால நிவாரணம் அளிக்க முடியுமா’ என, அறநிலையத் துறை பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த, பெரியசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பக்தர்களிடம் முடி இறக்கும் தொழிலில் ஈடுபட, 310 பேர் உரிமம் பெற்று, பணி செய்கிறோம். 100 நாட்களாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால், வருமானமின்றி சிரமப்படுகிறோம். உரிமம் பெற்ற தொழிலாளர்களுக்கு, துவக்கத்தில், தலா, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது; பின் நிறுத்தப்பட்டது. அறநிலையத் துறையிடம், 300 கோடி ரூபாய் உபரி நிதி உள்ளது. ஊரடங்கில், அறநிலையத் துறை ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படுகிறது. எங்களை போன்ற தொழிலாளர்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
எங்களை போன்ற தொழிலாளர்களுக்கு, பேரிடர் கால நிவாரணமாக, தினமும், 600 ரூபாய் பிழைப்பூதியம் வழங்க, அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, கோரியிருந்தார்.நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, ’இதுபோல், பிற கோவில்களிலும் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு கால நிவாரணம் அளிக்க முடியுமா என, ஜூலை, 27ல் அறநிலையத் துறை பதிலளிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.