பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
12:07
பெரம்பலுார், பெரம்பலுார் அருகே, மிகவும் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது. பெரம்பலுார் மாவட்டம், மழவராயநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் மனைவி நல்லம்மாள், 40, என்பவர் தனது நிலத்தில் விதைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒன்றே கால் அடி உயரமுள்ள உலோகத்திலான ஒரு கை கீழே ஊன்றி அமர்ந்த நிலையில் தலை மற்றும் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மிகவும் பழமையான கலை நயமிக்க அம்மன் சிலை மண்ணுக்குள் புதைந்து இருந்ததை பார்த்தார். அந்த சிலையை எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்துவிட்டு, பொதுமக்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், குன்னம் தாசில்தார் சின்னதுரை உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொல்லியல் துறையினர் மழவராயநல்லுார் கிராமத்துக்கு விரைவில் வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இச்சிலை ஐம்பொன்னால் ஆனது என கூறப்படுகிறது. இதனிடையே தகவலறிந்த எழும்பூர், கீழப்புலியூர், முருகன்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் மழவராநல்லுாருக்கு நேரில் வந்து சம்பந்தபட்ட சிலையை ஆர்வமுடன் பார்த்து பயபக்தியுடன் வழிபட்டு சென்றனர்.